சென்னை: தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நூறு டிகிரியைக் கடந்து வெயில் கொளுத்தியது.
தமிழகத்தில் வழக்கமான ஏப்ரல், மே மாதங்களில் வெயில் கொளுத்தும். குறிப்பாக, மே மாதம் அக்னி நட்சத்திரக் காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்.
இந்நிலையில், நடப்பாண்டில் மார்ச் மாதத் தொடக்கத்திலேயே சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, சேலம், வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் வெயில் சுட்டெரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேலத்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 9ஆம் தேதி 99 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவான வெயில், நேற்று முன்தினம் 100.4 டிகிரி செல்சியசாக பதிவானது.
அங்கு சாலையில் நடந்து செல்பவர்கள் மறக்காமல் குடைகளைக் கையோடு எடுத்துச் செல்கின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களில் இளநீர், நுங்கு, கம்பங்கூழ், தர்பூசணி ஆகியவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
மார்ச் மாத மத்தியிலேயே நூறு டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி உள்ளதால், கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரக் காலத்தில் 110 டிகிரி வெயில் அடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கத்திரி வெயிலின் போது, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சுட்டெரிக்கும் வெயில் நிலவும் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் இப்போதே அறிவுறுத்த தொடங்கிவிட்டனர்.

