கோவை: உக்ரேன் துணை ராணுவப் படையில் சேர்ந்து பணியாற்றிய கோவை மாணவர் சாய்நிகேஷ் நாடு திரும்ப சம்மதித்துள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
உக்ரேனில் விமானவியல் பட்டப்படிப்பை மேற்கொள்ள சென்ற சாய் நிகேஷ் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பியுள்ளார். ஆனால், அவரது உயரம் குறைவாக இருந்ததால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை.
இதையடுத்து, உக்ரேன் சென்ற அவர், அந்நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியதும் அந்நாட்டின் துணை ராணுவப் படையில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிலையில் அவரைப் பற்றி மத்திய, மாநில அரசுகளின் உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பெற்றோரைத் தொடர்புகொண்ட சாய்நிகேஷை நாடு திரும்புமாறு அவர்கள் வலியுறுத்தினர். எனினும், ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறிவிட்டதாகவும் நாடு திரும்ப விரும்பவில்லை என்றும் சாய்நிகேஷ் கூறியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், மகனுடன் சாய்நிகேஷ் பெற்றோர் தொடர்ந்து பேசி வந்தனர். ஒவ்வொரு முறையும் நாடு திரும்புமாறு பெற்றோர் கெஞ்சியதால் அவர் மனம் மாறியுள்ளார்.
இதையடுத்து, அவர் நாடு திரும்ப சம்மதித்துள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சிடம் தகவல் தெரிவித்திருப்பதாகவும் தங்களை பொறுமை காக்குமாறு அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் சாய்நிகேஷின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

