தரமணி: சென்னை திருவான்மியூரை அடுத்துள்ள தரமணி இணைப்புச் சாலையில் ரூ.5000 கோடி முதலீட்டில் புதிதாக அமையவுள்ள டிஎல்எஃப் தொழில் பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு, பொன்முடி, டிஎல்எஃப் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏறக்குறைய 27 ஏக்கர் பரப்பளவில் டிஎல்எஃப் டவுன்டௌன் என்ற பெயரில் கட்டப்படும் இந்த தொழில் பூங்காவில், ஸ்டான்டர்டு சார்ட்டர்டு நிறுவனத்தின் உலகளாவிய அலுவலக வளாகம் உள்பட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் அமையஉள்ளன.
மேலும், புதிதாகக் கட்டப்படும் கட்டடத்தின் அமைப்பு, செயல்முறை, பணியாளர்களின் பணிச் சூழல் உள்ளிட்டவற்றை உலகளாவிய தரத்தில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கு கட்டப்படும் வளாகத்தில் 2025 ஆம் அண்டிற்குள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருமளவு முதலீடு செய்யவும் 20 லட்சம் பேருக்கு நேரிடையாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளிக்கவும் திட்டம் வகுத்துள்ளதாக வும் கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "மக்களுக்காக பணி ஆற்றி வருகிறோம். அண்மை யில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவு மக்கள் திமுக மீது வைத்த நம்பிக்கையைக் காட்டுகிறது," என சுட்டிக்காட்டினார். கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம்தான் எனவும் கூறிய முதல்வர், பொய் பிரசாரங்களை முறியடித்து திமுக மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.