ஆவடி: ஆவடியில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக, கொலை நடந்த 20 மணி நேரத்தில் 10 குற்றவாளிகளைத் தனிப்படை காவல் குழுவினர் கைது செய்துள்ளனர்.
ஆவடி ஓசிஎஃப் மைதா னத்தில் நேற்று முன்தினம் இரவு மீன் வியாபாரி அசாருதீன், 27, ஆட்டோ ஓட்டுநர் சுந்தர், 29, ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்தது தெரிய வந்தது. ஆவடியைச் சேர்ந்த மணிகண்டன், ஜெகன் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து மணிகண்டன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜெகனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். சம்பவம் அன்று ஜெகன், அசாருதீன், சுந்தர் உள்ளிட்ட சிலருடன் மது அருந்தியுள்ளார். ஜெகனுக்கு விரித்த மரண வலையில் அசாருதீன், சுந்தர் இருவரும் உயிரிழந்தனர்.

