செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
1243e659-49ff-4d93-9d01-fc934067bf1f
-

அண்ணாநகரில் தூக்கம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி

சென்னை: உலக உறக்க தினம் வரும் 18ஆம் தேதி கடைப் பிடிக்கப்படுவதை முன்னிட்டு சென்னை அண்ணாநகரில் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் தூக்கம் குறித்த விழிப்புணர்வுப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தினர், நாள்தோறும் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரையிலான தூக்கம் மிக அவசியம் எனத் தெரிவித்தனர். உறக்கம் வருவதற்காக மருந்து மாத்திரைகள் உட்கொள்வதைத் தவிர்க்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட யானை சிறைபிடிப்பு

ராமநாதபுரம்: தூத்துக்குடியில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டைக்கு உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட யானை சிறைபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, யானையை அழைத்துச் சென்ற இரு ஆடவர்களை ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால் யானை விடுவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

வடிகால் அமைக்கும் பணியை

விரைந்து முடிக்க மேயர் அறிவுறுத்து

சென்னை: சென்னை மாநகராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணி ஆணைகளை வழங்கி, வரும் பருவமழைக்குள் பணிகளை முடித்துத் தர ஒப்பந்ததாரர்களுக்கு மேயர் பிரியா அறிவுறுத்தியுள்ளார்.

'நடிகர் விஜய்யின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்க'

சென்னை: வெளிநாட்டு கார் வழக்கில் நடிகர் விஜய்யின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. இறக்குமதி காருக்கு வரி செலுத்த தாமதமானதால் அபராதத்தை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.