சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் தெப்பக் குளத்தில் இருந்து மூன்று சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
சென்னை மைலாப்பூர் பகுதியில் உள்ளது பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் திருக்கோவில். இங்கு கடந்த 2004ஆம் ஆண்டு மயில் சிலை ஒன்று காணாமல் போனது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். எனினும் இதுவரை எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில், காணாமல் போன சிலைகள் கோவிலின் தெப்பக்குளத்தில் இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திங்கட்கிழமை காலை தெப்பக் குளத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது மூன்று சிறிய சிலைகள் கிடைத்துள்ளன.
தேடுதல் பணியில் ஆறு படகுகள் ஈடுபடுத்தப்பட்டன. பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்கள் சிலைகளைத் தேடினர்.
இதுவரை மயில் சிலை கிடைக்கவில்லை என்றும் தேடுதல் நடவடிக்கை நீடிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டனர்.