வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து: சிறுமி பலி
குமரி: வீட்டில் பட்டாசுகள் தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஜீவன வர்ஷா என்ற சிறுமி உயிரிழந்தாள். இந்தச் சோகச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியில் நிகழ்ந்துள்ளது. வர்ஷாவின் தந்தை நேற்று முன்தினம் வீட்டிலேயே பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தபோது, அவர் வைத்திருந்த வெடிபொருளில் திடீர் உராய்வு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது. மொத்த வெடிபொருளும் வெடித்துத் தீர்ந்ததில் வீட்டில் இருந்த சிறுமி வர்ஷா படுகாயம் அடைந்து உயிரிழந்தாள்.
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தீபா, தீபக் எதிர்மனுதாரர்களாக சேர்ப்பு
சென்னை: காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி, வருமான வரித்துறை வழக்கு தொடுத்தது. கடந்த 2008ஆம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் இத்தனை ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், ஜெயலலிதா காலமாகிவிட்டதால், இந்த வழக்கில் அவரது சட்டபூர்வ வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகிய இருவரையும் சேர்க்க வேண்டும் என வருமான வரித்துறை மனுத்தாக்கல் செய்தது. அதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இருவரையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டனர்.
யோகாவில் புதிய உலக சாதனை
சென்னை: ஒரே நாளில் 8,750 யோகா முத்திரைகளைச் செய்து காண்பித்து மாணவர்கள் உலக சாதனை புரிந்துள்ள னர். சென்னையில் உள்ள தனியார் அமைப்பு ஒன்று இந்தச் சாதனை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் புதுக்கோட்டையில் இயங்கி வரும் யோகா மையமும் இணைந்து கொண்டது. இணையம் வழி நடைபெற்ற இந்தச் சாதனை நிகழ்வில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தமிழகம் மட்டுமல்லாமல் மேலும் பல மாநிலங்களில் இருந்தும் மொத்தம் 875 மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பங்கேற்பாளரும் பத்து யோகா முத்திரைகள் வீதம், மொத்தம் 8,750 யோகா முத்திரைகளை, குறிப்பிட்ட மனித ஆற்றல் நிமிடங்களில் செய்து காட்டினர். இது புதிய உலகச் சாதனை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தொலைபேசியைத் தர மறுத்த தங்கை: கோபத்தில் வெட்டிக்கொன்ற அக்கா
திண்டுக்கல்: வேடசந்தூரை சேர்ந்த தமிழ்செல்வி (43 வயது). கணவர் இறந்துவிட்டதை அடுத்து, தாயார் பழனியம்மாளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தமிழ்செல்வியின் மூத்த சகோ தரியான வெங்கடேஸ்வரி (46 வயது) தன் தாயைக் காண வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மூவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை வேளையில் திடீரென எழுந்த வெங்கடேஸ்வரி, தன் மகனைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று கூறி, தமிழ்செல்வியிடம் அவரது கைபேசியைக் கேட்டுள்ளார். அதற்கு காலையில் பேசலாம் என்று தமிழ்செல்வி கூற, ஆத்திரமடைந்த வெங்கடேஸ்வரி, வீட்டில் இருந்த அரிவாள்மனையால் தமிழ்செல்வியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

