ரூ.58.23 கோடி சேர்த்ததாகப் புகார்; 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு சோதனை
கோவை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக அதிமுக முன்னாளா் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (படம்) மீது தமிழக காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இது அவர் மீது பதிவாகும் இரண்டாவது வழக்காகும்.
தனது வருமானத்துக்கும் அதிகமாக ரூ.58.23 கோடி குவித்துள்ளதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து வேலுமணிக்குச் சொந்தமான, அவருடன் தொடர்புடைய இடங்களில் நேற்று காலை காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
நேற்று காலை கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு அதிகாலை வேளையில் வந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், உடனடியாக சோதனை நடத்தினர். அதேவேளையில், அவரது உதவியாளர் சந்தோஷ், கோவை சிங்காநல்லூர் எம்எல்ஏ ஜெயராமனின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களின் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 58 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் மட்டும் பத்து இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அவரது சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வேலுமணியுடன் கூட்டு சேர்ந்து ஊழல் செய்ததாக 6 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி,சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார் எஸ்.பி.வேலுமணி.
அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அவர் மீது வழக்குப் பதிவானது. அப்போது 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு பல்வேறு முக்கிய ஆவணங்கள், ரூ.13 லட்சம் ரொக்கப் பணம், நிலப்பதிவு தொடர்பான பத்திரங்கள், தனியார் நிறுவனங்களுடனான பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று மீண்டும் வேலுமணியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இம்முறை அவர் தமது பதவிக்காலத்தின்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப் பதிவாகி உள்ளது.
இதற்கிடையே திருப்பத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றிலும் நேற்று காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அது வேலுமணியின் உறவினருக்குச் சொந்தமான கடை எனக் கூறப்படுகிறது.