ஆசியாவின் மிகப் பெரிய தேர் என்ற பெருமையுடன் திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். 'ஆரூரா தியாகேசா' என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திமுக எம்எல்ஏ கலைவாணன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், திருப்புகழூர் வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் பங்கேற்றனர். திருவாரூர் வீதிகளில் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். இதையடுத்து திருவாரூரில் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. கொரோனா நெருக்கடியில் இருந்து தமிழகம் கிட்டத்தட்ட விடுபட்டுள்ளதால், பொதுமக்கள் தேரோட்டத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: தகவல் ஊடகம்

