தேசிய சுகாதார ஆய்வறிக்கையில் தகவல்
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் பொருளியல் திறனில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த பெண்களைவிட முன்னிலை வகிப்பதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வரும் தேசிய சுகாதார ஆய்வறிக்கையில் இது குறித்து விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கை நிர்வகித்தல், கைபேசி மூலம் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுதல், அரசாங்கம் வழங்கக்கூடிய நுண் கடன் திட்டங்களைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளின் அடிப்படையில் பொருளியல் திறன் கணக்கிடப்படுகிறது.
பொருளியல் ரீதியாக பெண்கள் அதிகாரம் மிக்கவர்களாக உள்ளனரா என்பது தொடர்பில் கடந்த 2020-2021ஆம் ஆண்டுக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பான தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை அண்மையில் வெளியானது. அதில், தமிழகப் பெண்களில் சுமார் 92 விழுக்காட்டினர் சுயமாக வங்கிக் கணக்கை நிர்வகித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 93% பெண்களும் கிராமப்புறங்களில் 92% பெண்களும் வங்கிக்கணக்கை தாமே நிர்வகிப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
"தமிழகப் பெண்களில் நான்கு பேரில் ஒருவர் கைபேசி மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். நகர்ப்புறங்களில் 32% பெண்களும் கிராமப்புறங்களில் 21% பெண்களும் கைபேசியை இவ்வாறு பயன்படுத்துகின்றனர்.
"எனினும் நுண்கடன் திட்டங்களைப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. 74% பெண்கள் மட்டுமே நுண்கடன் திட்டங்கள் குறித்து அறிந்து வைத்துள்ளனர். அவர்களில் 18% பெண்கள் மட்டுமே கடன் பெற்று பயனடைந்துள்ளனர்," என்கிறது ஆய்வறிக்கை.
தமிழகத்துக்கு அடுத்தபடியாக புதுவையிலும் நகர்ப்புறங்களில் 93% பெண்களும் கிராமப்புறங்களில் 96% பெண்களும் வங்கிக்கணக்கை நிர்வகிக்கின்றனர்.
தேசிய அளவில் கர்நாடகத்தில் 89%, கோவாவில் 88%, ஒடிசா, சண்டிகரில் 87%, ஜம்மு காஷ்மீரில் 85%, இமாச்சலப் பிரதேசத்தில் 83% பெண்கள் வங்கிக்கணக்குகளை தாமே நிர்வகிப்பதாக தேசிய சுகாதார ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

