சென்னை: இந்திய அளவில் மின்னணுவியல் சார்ந்த உற்பத்தியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 20 விழுக்காடாக உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்தத் துறையாக இருந்தாலும் அதில் முன்னணி வகிக்க வேண்டும்; பின்னர் முதல் நிலை என்ற அந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் குறிக்கோள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பெரும்புதூரில் சாம்சங் நிறுவனம் ரூ.1,588 கோடி முதலீட்டில், 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. அதற்கான புரிந்துணர்வு கையெழுத்தாகியுள்ளது. இந்நிகழ்வில் பேசும்போதே முதல்வர் ஸ்டாலின் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் உங்கள் தயாரிப்பு வரிசையைப் பல்வகைப்படுத்தி, மேலும் விரிவாக்கம் செய்யுங்கள் என்று சாம்சங் நிர்வாகத்தை தாம் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், கணினிச்சில்லு உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மறைந்த முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் பல்வேறு பெரிய நிறுவனங்களை முதலீடு செய்ய வைத்ததாகவும் அந்த நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்குத்தான் இப்போது தாம் அடிக்கல் நாட்டி வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
"அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கொள்கையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. வேலை வாய்ப்புகளை வழங்கும் சாம்சங் நிறுவனத்துக்கு நன்றி," என்றார் முதல்வர் ஸ்டாலின்.

