சென்னை: திருப்பத்தூர் அருகே சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்திய கற்குவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு தலைமையிலான ஆய்வு மாணவர்கள் ஏலகிரி மலையில் கள ஆய்வு மேற்கொண்ட போது, மிகப்பெரிய ஈமக்காடு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் (படம்).
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முனைவர் ஆ.பிரபு, மலையின் பின்புற சரிவில் நீலிக்கொல்லி என்ற பகுதியில் பதினைந்துக்கும் மேற்பட்ட கற்குவைகள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
கற்குவைகள் என்பன பெருங்கற்கால மக்களது ஈமச்சின்னங் கள் என்றும் அந்நாள்களில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்துவிட்டு அந்த இடத்தை அடையாளம் காண்பதற்காக பல்வேறு அமைப்புகளை அங்கே ஏற்படுத்தி வைத்திருந்ததாகவும் அவர் விளக்கினார்.
"அவற்றை கல்வட்டம், கற்திட்டை, கற்பதுக்கை, நெடுங்கல் எனக் குறிப்பிடுவர். அந்த வரிசையில் கற்குவை என்கிற அமைப்பும் அடங்கும்.
"அதாவது, உயிரிழந்த ஒருவரை அக்கால மக்கள் அடையாளப்படுத்தி இருந்தனர். இப்படிப்பட்ட கற்குவைகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே இடத்தில் பதினைந்துக்கும் மேற்பட்டவை கிடைத்திருப்பது இதுவே முதன் முறை," என்றார் முனைவர் ஆ.பிரபு.

