மதுரை: அரசு அலுவலகங்களில் பணி நேரத்தின்போது அரசு ஊழியர்கள் கைபேசியைப் பயன்படுத்துவதும் காணொளிகளைப் பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகளும் நடத்தை மீறல் ஆகும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.
அரசு அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக கைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
அரசு அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் கைபேசியைப் பயன்படுத்துவது இயல்பான விஷயமாக மாறிவிட்ட நிலையில், இந்த நிலைமை மாற, அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் நுழையும்போதே கைபேசிகளை ஒரு பொதுவான இடத்தில் வைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே நீதிமன்றம் முன்வைக்கும் கருத்து என்று நீதிபதி குறிப்பிட்டார்.
எனினும் அவசர நேரங்களில் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று அலுவலகத்திற்கு வெளியே சென்று கைபேசியில் பேச அனுமதிக்கலாம் என்றும் பணி நேரத்தின்போது கைபேசியில் பேசுவது, அதன் படச்சாதனத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளை ஒழுங்கு படுத்தவேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
"இது தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அந்த உத்தரவு, சுற்றறிக்கையை மீறும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"அரசு அலுவலகங்களில் பணி நேரத்தில் கைபேசி, அவற்றின் படச்சாதனத்தைப் பயன்படுத்துவதை வரைமுறைப்படுத்த வழிகாட்டுதல்களை ஏற்படுத்த வேண்டும்," என்றார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்.
திருச்சி சுகாதாரத்துறை மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் டி.எஸ்.ராதிகா.
இவர் அலுவலகத்தில் பணி நேரத்தின்போது கைபேசியில் காணொளிகள் பதிவு செய்வதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கைபேசியைப் பறிமுதல் செய்யுமாறு உயரதிகாரி உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த அதிகாரியையும் அலுவலகக் காவலரையும் ராதிகா தாக்கினார். அதன் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையை அணுகினார் ராதிகா. அவரது வழக்கை விசாரித்தபோதே நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மேற்குறிப்பிட்ட உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

