செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
abd20543-4fdc-4bd8-b697-f80059e67678
-

மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரத் தயங்குகின்றன. இந்நிலையில், இருசக்கர வாகனங்களில் செல்வதைத் தவிர்த்துவிட்டு, மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களில் மட்டும் 17.88 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். கொரோனா நெருக்கடி காலத்தில் மெட்ரோ ரயில் சேவையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தவில்லை. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இழப்பீடு கோரிய விவசாயிகள் கைது

மதுரை: மேலூர் அருகே மாயாண்டிபட்டியில் எரிவாயு குழாய் பதிக்கும் நிலங்களுக்கு சமமான இழப்பீடு வழங்கக்கோரி போராடிய விவசாயிகளைக் காவல்துறையினர் கைது செய்தனர். அங்கு இருபோக சாகுபடி விளை நிலத்தில் ஒரு பகுதி நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.94 லட்சம் இழப்பீடும் அருகிலுள்ள விளைநிலங்களுக்கு ரூ.9 லட்சம் இழப்பீடும் வழங்கப்படுகிறது. எனினும், அனைவருக்கும் சமமான இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். கடந்த வாரம் இது தொடர்பாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விவசாயிகள் சிலர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறை கைது செய்து மாலை விடுவித்தது.

மின்கசிவால் தாய், இரு மகள்கள் பலி

கோவை: கணினிக்கான மின்கருவியில் ஏற்பட்ட கசிவு காரணமாக தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கோவை மாவட்டம் உருமாண்டம்பாளையம் பகுதியில் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமி என்பவரின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இதையடுத்து, தனது இரு மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்து புகை வந்ததால் அண்டை வீட்டார் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஜயலட்சுமியும் அவரது இரு மகள்களும் உடல் கருகி படுக்கையில் இறந்துகிடந்தனர். விசாரணையில் மின்கசிவு காரணமாக மூவரும் உயிரிழந்தது தெரியவந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழக பாஜக துணைத் தலைவராக கே.பி.ராமலிங்கம் நியமனம்

சென்னை: தமிழக பாஜக துணைத் தலைவராக கே.பி.ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். திமுக முன்னாள் எம்பியான கே.பி.ராமலிங்கம் அக்கட்சியின் விவசாய அணித் தலைவராக பொறுப்பில் இருந்தார். இந்நிலையில் அவர் கட்சித் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்தார். இதையடுத்து, திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பரில் பாஜகவில் தம்மை இணைத்துக்கொண்டார் ராமலிங்கம். இந்நிலையில், அவர் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

18 சிறாருக்குத் தொற்று பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் 77 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 18 பேர் சிறார் எனத் தெரிய வந்துள்ளது. நேற்று முன்தினம் கிருமித்தொற்றுக்கு யாரும் பலியாகவில்லை. 19 மாவட்டங்களில் புதிதாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்பட்டவில்லை. எனினும், சிறார் பாதிக்கப்படுவதை மனத்தில் கொண்டு அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.