மதுரை: காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு தாமே வாரிசு என்கிறார் திருவள்ளூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி மீனாட்சி (படம்).
38 வயதான இவர், தமக்கு ஜெயலலிதாவின் வாரிசு என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என இணையம் வழி கடந்த ஜனவரி 27ஆம் தேதி மதுரை வடக்கு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
தனது தந்தை நடிகர் ஷோபன் பாபு என்றும் தாய் ஜெயலலிதா என்றும் குறிப்பிட்டுள்ள அவர், பெற்றோரை இழந்துவிட்டதால் தமக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கோருகிறார்.
மீனாட்சியின் விண்ணப்பத்துடன் அவரைப் பற்றிய ஆவணங்கள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. இதனால் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் வடக்கு தாலுகா அலுவலகத்துக்கு வந்த மீனாட்சி, தமக்குச் சான்றிதழ் வழங்க வேண்டும் என அங்கிருந்த துணை தாசில்தாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
ஆனால், நீதிமன்றத்தை அணுகி, தாமே ஜெயலலிதாவின் வாரிசு என உரிமை கோரி, அதற்கான உத்தரவைப் பெற்று வருமாறு கூறி அவரை அனுப்பி வைத்தார் துணை தாசில்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்கப் பேசிய மீனாட்சி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமது வழக்கறிஞரிடம் கலந்தாலோசிக்கப் போவதாக தெரிவித்தார்.

