சென்னை: பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும் நடிகர் விஜய்யும் சந்தித்துப் பேசியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அச்செய்தி உண்மையல்ல என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது சில இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதையடுத்து விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் அதற்கான நடவடிக்கைகள் ரகசியமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இது குறித்து ஆலோசிப்பதற்காக பிரஷாந்த் கிஷோரை அவர் அண்மையில் ரகசியமாக சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், அப்படியொரு சந்திப்பு நிகழவில்லை என்றும் விஜய் தற்போது சென்னையில் இல்லை என்றும் அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

