சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் மழை நீர் கட்டமைப்பை ஏற்படுத்தவும், கால்வாய் இணைப்பு பகுதி இல்லாத பகுதிகளில் இணைப்பை ஏற்படுத்தி, வரும் காலங்களில் மழைநீர் தேங்காத அளவுக்கு கட்டமைப்பை உருவாக்கவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி முதல் கட்டமாக திரு.வி.க. நகர் மண்டலம் புளியந்தோப்பு பகுதியில் புவியியல் மேற்பரப்புக்கு ஏற்ப புதிய மழைநீர் வடிகால் ஏழு கோடி ரூபாய் செலவில் அமைக்கும் பணி நடைபெற்றது.
புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டெமலஸ் சாலை, டிகாஸ்டர் சாலை ஆகிய பகுதிகளில் சிறு தெருக்களிலும் புவியியல் மேற்பரப்புக்கு ஏற்ப மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வந்தது.
வழக்கமாக 6 முதல் 7 சென்டி மீட்டர் மழைநீர் வடிவதற்கு ஏற்ப கட்டப்படும் வடிகால் கட்டமைப்பு 10 சென்டி மீட்டர் மழை நீரை உள்வாங்கும் அளவுக்கு பெரிதாக அமைக்கப்பட்டு உள்ளது.
இதே போல் வேப்பேரி பிரதான சாலையிலும் கால்நடை மருத்துவக் கல்லூரி முன்பாக பெரிய அளவில் மழைநீர் வடிகால் வசதி கட்டப்பட்டு வந்தது.
இந்தப் புதிய மழைநீர் வடிகால் கட்டும் பணிகளை நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
முதலில் வேப்பேரி பிரதான சாலைக்குச் சென்ற ஸ்டாலின், காரைவிட்டு இறங்கி அங்கிருந்து நடந்து சென்று மழை நீர் வடிகால் கால்வாய் கட்டும் பணிகளை பார்வையிட்டார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி, வடிகால் பணிகளைப் பற்றி விளக்கினார்.
அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு முதல்வர் கூறினார்.
இதன்பிறகு புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு நடைபெற்று வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் பெரம்பூர் நெடுஞ்சாலையில் கூக்ஸ் சாலை சந்திப்புக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்.
இந்தப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர், பின்னர் அங்கிருந்து மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையம் அருகே உள்ள ராமாராவ் தெருவுக்குச் சென்றார். அங்கு நடக்கும் மழைநீர் வடிகால் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர் மந்தைவெளி பேருந்து நிலையம் அருகே தேவநாதன் தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார்.
இது தவிர சென்னையில் மற்ற இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையரிடம் அவர் கேட்டறிந்தார்.
"அடுத்த மழை வருவதற்குள் சென்னை நகரில் மழைநீர் வடிகால் கால்வாய்களை விரைந்து கட்டி முடிக்க வேண்டும்," என்று ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் முதல்வருடன் இருந்தனர்.

