சென்னை: பெரும் நட்டத்தில் இயங்கும் 'பிஜிஆர்' என்ற நிறுவனத்திற்கு தமிழக மின்சார வாரியம் 4,442 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்திட்ட ஒப்பந்தத்தை அனைத்து விதிகளையும் மீறி வழங்கி இருப்பதாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
"அனைத்து விதிகளையும் மீறி பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்துக்கு மின்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது, திமுகவுக்கு வேண்டிய நிறுவனம்," என்றும் அவர் கூறியுள்ளார்.
"கடந்த 2019 டிசம்பர் 12ஆம் தேதி மின் வாரியம், சென்னை எண்ணுாரில், 660 மெகாவாட் திறன் உடைய அனல்மின் நிலையம் அமைக்க, அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குகிறது. இதற்கான மொத்த செலவு, 4,442 கோடி ரூபாய். இந்த நிதியை மத்திய அரசின் 'பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்' வழங்குகிறது.
இந்தத் திட்டம் எப்படி நடக்க வேண்டும் என்பது தொடர்பாக மத்திய அரசு 2020 நவம்பர் 12ல் ஓர் ஆணை வழங்குகிறது. சட்டசபைத் தேர்தல் காலமான 2021 ஏப்ரல் 23ல் பிஜிஆருக்கு வழங்கிய ஒப்புதல் கடிதத்தை ரத்து செய்கிறது. இதற்கு வங்கி உத்தரவாதமான 440 கோடி ரூபாயை கொடுக்க முடியாததே காரணம். அந்த நிறுவனம் காகிதத்தில் மட்டும் இருக்க கூடியது. லாபம் ஈட்டும் நிறுவனம் இல்லை. உதாரணமாக, அந்நிறுவனத்திற்கு 2020-21ல் நிகர இழப்பு மட்டும் 355.42 கோடி ரூபாய். வெறும் 33 கோடி ரூபாய் மட்டும் வங்கியில் வைத்துள்ள நிறுவனம்.
"அந்த நிறுவனத்திற்கு 4,442 கோடி ரூபாய் ஒப்பந்தம் கொடுத்து, வங்கி உத்தரவாதம் தராததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. இதை எதிர்த்து, பிஜிஆர் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது. நிறுவனத்தின் சார்பில் திமுக எம்.பி வில்சன் முன்னிலையானார். இப்படி ஒன்றுமே இல்லாத ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க இருப்பது குறித்து ஏற்கெனவே புகார் எழுப்பினோம். மார்ச் 10ஆம் தேதி வரம்புகளை மீறி அந்த நிறுவனத்திற்கு, 4,442 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது," என்று அண்ணாமலை கூறினார்.
இதற்கிடையே இதற்குப் பதில் அளித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 'பிஜிஆர் நிறு வனத்தில் கோபாலபுரம் பணம் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது' என அண்ணாமலை கூறியுள்ளார். அவருக்கு 24 மணி நேரம் அவகாசம் தருகிறோம். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகளை சொன்னார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று எச்சரித்துள்ளார்.

