ராமர் கோயிலில் சசிகலா
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ஏரிகாத்த ராமர் கோயிலில் நேற்று சசிகலா சிறப்பு தரிசனம் செய்தார். பின்னர் கோயிலில் இருந்து புறப்பட்ட சசிகலா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார்.
ரவிச்சந்திரனுக்கு விடுப்பு நீட்டிப்பு
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரனின் சிறை விடுப்பை ஐந்தாவது முறையாக தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ரவிச்சந்திரனுக்கு 30 நாள்கள் சிறை விடுப்பு கோரி அவரது தாயார் முதல்வருக்கு மனு அளித்தார்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் நீதிமன்றம், மனுவை பரிசீலிக்கும்படி தெரிவித்த நிலையில் சிறை விடுப்பு வழங்கப்பட்டு கடந்த நவம்பர் 11ஆம் தேதி ரவிச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டத்துக்குச் சென்றார்.
இந்த நிலையில் தாயார் ராஜேஸ்வரியை உடனிருந்து கவனித்துக் கொள்ள முப்பது நாள்கள் கூடுதலாக சிறை விடுப்பு கோரிய அவரது குடும்பத்தினரின் மனுவை ஏற்று கடந்த நான்கு மாதங்களாக விடுப்பு நீட்டிக்கப்பட்டது. அது முடிவடைய இருந்த நிலையில் 5வது முறையாக ரவிச்சந்திரனின் சிறை விடுப்பு ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
'நீராவி' முருகன் உடல்
பிரேதப் பரிசோதனை
திருநெல்வேலி: திருநெல்வேலியில் 'என்கவுண்டர்' மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி 'நீராவி' முருகனின் உடல் பிரேதப் பரிசோதனை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது. நாங்குநேரி மாஜிஸ்திரேட் ராம்கிஷோர் முன்னிலையில் மருத்துவர்கள் செல்வமுருகன், பிரசன்னா ஆகியோர் பிரேதப் பரிசோதனை செய்தனர்.

