சென்னை: தமிழக அரசின் 2022-2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சட்டப்பேரவையில் நேற்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
காகிதமற்ற வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது உரையைத் தொடங்கினார்.
ஒவ்வொரு துறை வாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து சுமார் 110 நிமிடங்கள் நின்றபடியே விவரங்களை வெளியிட்டார்.
2014ஆம் ஆண்டு முதல் வரு வாய்ப் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதி கரித்து வந்துள்ளது. முதன்முறையாக இவ்வாண்டில் இந்நிலை மாற்றப்பட்டு 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது. இந்த சவாலான ஆண்டிலும் நிதிப் பற்றாக்குறை 4.61% இருந்து 3.80% ஆக குறைய உள்ளது. இப்போதைய அரசின் தீர்க்கமான நடவடிக்கைகளும் நிர்வாகத் திறனுமே இதனை சாத்தியமாக்கியுள்ளது என்றார்.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். பேரவையில் பேச தனக்கு அனுமதி அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கோரினார்.
அப்போது நிதி அமைச்சரின் உரை முடிந்ததும் பேசலாம் என சபாநாயகர் மு.அப்பாவு உறுதி கூறியபோதும், அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு, வெளி நடப்பு செய்தனர்.
ஏமாற்றம் அளிக்கும் 'பட்ஜெட்'
"கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது," என்று பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிப்பதில் காட்டும் வேகத்தை, திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு காட்டியிருக்கவேண்டும்," என்று இக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறைக்கு ஏறத் தாழ 36,895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது. பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகிய படிப்புகளை மாணவிகள் படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
'ஸ்மார்ட்' வகுப்பறைகள், கணினி வகுப்புகள் என பள்ளி களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,300 கோடி செலவு செய்யப்படும்.
சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்குச் சிறப்புக் குழு நிர்ணயிக்கப்பட்டு, முதல்கட்டமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் பணிகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு ரூ.5 கோடி செலவில் 21 மொழிகளில் அச்சிடப்படும்.
காவல்துறைக்கு ரூ.10,282 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.4,816 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தீயணைப்புத் துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடு.
வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட தங்க நகைக் கடன் தள்ளுபடிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடிக்கு ரூ.500 கோடி, வட்டியில்லா பயிர்க் கடன் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதாந்திர நிதியுதவியாக ரூ.1,000 வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நிதி நெருக்கடி காரணமாக இத்திட்டத்தை முதல் ஆண்டில் செயல்படுத்த முடியவில்லை. தமிழக நிதி நிலைமை சீரடைந்த பின்னர் அத்திட்டம் செயல்படுத்தப்படும்.
நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்