புதுக்கோட்டை: பார்வையற்ற மாற்றுத்திறனாளியை அடித்துக் கொடுமைப்படுத்தியது தொடர்பாக பிரபு, செந்தில், அசோக்குமார் ஆகிய மூன்று காவலர்களும் காவல் ஆய்வாளர் நிஷா பார்த்திபனும் ஐ.ஜி. உத்தரவின்பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கவரப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர், 29. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், அப்பகுதியில் நடந்து வரும் சட்டவிரோத மது விற்பனை குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, விராலிமலை காவலர்கள் சிலர் சங்கரை நேரில் சந்தித்து, "எதுவாக இருந்தாலும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கலாம், கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்து இருக்க வேண்டியதில்லை," என்று கூறியுள்ளனர். அப்போது காவலர்களுக்கும் சங்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சங்கரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவலர்கள் அவரை லத்தியால் தாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.

