சாலைமறியலைக் கைவிடும்படி
கைகூப்பி கும்பிட்ட காவல் அதிகாரி
பாணாவரம்: காவல் அதிகாரி ஒருவர் கைகூப்பி கும்பிட்டதை அடுத்து, பள்ளி மாணவர்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், மேல் வீராணம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் போதுமான அளவில் ஆசிரியர்கள் இல்லை எனவும் பாதுகாப்பான வகுப்பறைகள் இல்லை எனவும் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியைப் புறக்கணித்து பாணாவரம்-காவேரிப்பாக்கம் சாலையை மறித்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த பாணாவரம் காவல் ஆய்வாளர், "உங்களது பிரச்சினைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தயவுசெய்து சாலை மறியலைக் கைவிட்டு பள்ளிக்குச் செல்லுங்கள்," என மாணவர்களைக் கைகூப்பி கும்பிட்டதால் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
இரு மாதமாக தண்ணீர் வராததால் வலையப்பட்டி மக்கள் சாலை மறியல்
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வசிக்கும் வலையப்பட்டி கிராம மக்கள் குடிநீர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களது கிராமத்துக்கு இரண்டு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வரவில்லை எனவும் இதுகுறித்து தாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், உசிலம்பட்டி பேரையூர் சாலையில் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட நிலையில், உசிலம்பட்டி நகரக் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் மக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.
திறன் வாய்ந்த விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் பரிசுத் தொகை
சென்னை: மாநிலம் முழுவதும் திறன் வாய்ந்த விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில அளவில் புதிய வேளாண் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த விவசாயிக்கு ஒரு லட்சம் ரூபாயும் சிறந்த வேளாண் கருவி கண்டறிந்த விவசாயிக்கு 2 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரூ.1,200 கோடியில் 7,500 குடியிருப்புகள் கட்டப்படும்
சென்னை: சிதிலமடைந்த குடியிருப்புகளை அகற்றி மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 7,500 குடியிருப்புகள் நடப்பு நிதியாண்டில் கட்டப்படும் என்று குறு சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.
"புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்படும். மறுகட்டுமானப் பணி நடக்கும் தருணத்தில் இக்குடியிருப்பாளர்கள் வெளியே வாடகை வீட்டில் வசிப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது போல் ரூ.24,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்," என அவர் மேலும் கூறியுள்ளார்.

