தேனி: பள்ளி மாணவர்கள் கத்தியுடன் வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பினர் தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது உயிருக்கு அச்சுறுத் தல் உள்ளதால் பாதுகாப்பு அளிக்கக் கோரியுள்ளனர் ஆசிரியர்கள்.
அண்மையில், தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியரைத் தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளதால் ஆசிரியர்கள் பாதுகாப்பு கோரினர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், "தேவாரம் பள்ளியில் புத்தகம் கொண்டு வரும்படி கூறிய ஆசிரியரை மாணவர் தாக்கியுள்ளார். ஜி.கல்லுப்பட்டியில் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து ஆசிரியர்களைக் கிண்டல் செய்துள்ளனர்.
"தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் ஒருவர் கத்தியுடன் வகுப்புக்குள் வந்து ஆசிரியரைக் குத்த முயன்றுள்ளார்.
"இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. மாணவரை விசாரித்த நிலையில், இப்போது மீண்டும் அந்த மாணவர் பள்ளிக்கு கத்தியுடன் வந்து காவல்துறையினர் முன்னிலையிலேயே ஆசிரியருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
"இதனால் இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம்," என்றனர்.

