கடலூர்: கடலூர் மாவட்டம், கே.என். பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஏடிஎம் மையத்தில் ரூ.9 லட்சம் பணம் களவு போனது.
இம்மையத்தில் பணம் நிரப்பிய ஊழியரே பணத்தைக் களவாடிச் சென்றது காவல்துறையின் விசா ரணையில் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் கிருஷ்ணகுமார் என்பவரிடம் இருந்து ரூ.697,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மீதமுள்ள பணத்தை அவர் என்ன செய்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், விஸ்வநாத புரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. இவரது மகன் கிருஷ்ண குமார், 26. இவர், தனியார், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏடிஎம் இயந்திரப் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், அவர் தன்னுடன் பணிபுரியும் மூவருடன் சென்று கடலூரில் உள்ள ஏடிஎம் இயந்தி ரத்தில் பணத்தை நிரப்பிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
அதன்பிறகு, ஏடிஎம் மையத்தில் இருந்து ரூ.9 லட்சம் பணம் களவு போய் இருப்பதாக மேற்பார்வையாளர் ராஜா என்பவர் திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து, ஏடிஎம் இயந் திரத்தில் பணம் நிரப்பிய நான்கு ஊழியர்களிடமும் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.
அப்போது, ஏடிஎம்மில் பணம் நிரப்பிவிட்டு வீட்டுக்குச் சென்ற பிறகு, நள்ளிரவில் தான் மட்டும் தனியாக வந்து ரகசிய எண்களைப் பயன்படுத்தி இயந்திரத்தில் இருந்து ரூ.9 லட்சம் பணத்தைத் திருடியதையும் அவசரகதியில் சாவியை இயந்திரத்திலேயே விட்டுவிட்டுச் சென்றதையும் கிருஷ்ணகுமார் ஒப்புக்கொண்டார்.