கைபேசிகள் உரியவர்களிடம் ேசர்ப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் திருடப்பட்ட, தவறவிடப்பட்ட ரூ.31 லட்சம் மதிப்பிலான கைபேசிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. குற்றத் தடுப்பு காவல்துறையினரால் மீட்கப்பட்ட 176 கைபேசிகளும் செங்கல்பட்டு மாவட்ட காவல் ஆய்வாளர் அரவிந்தன் தலைமையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கிணற்றுக்குள் ஜல்லிக்கட்டு காளை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்குப் பிறகு, காளை ஒன்று கிணற்றுக்குள் விழுந்தது. மாடுகள் வெளியேறும் பகுதிக்கு அருகிலேயே இருந்த கிணற்றில் விழுந்த காளையைத் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
'ரூ.1,019 கோடி செலவில் அரசு மருத்துவமனைகள் தரம் உயரும்'
சென்னை: தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட ஆறு மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட உள்ளது. இதற்காக, ரூ.1,019 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி மூலம் அரசு மருத்துவமனைகள் புதிய மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தெரிவித்தால் சன்மானம்
தூத்துக்குடி: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பில், குற்றவாளிகள் குறித்த விவரங்களைத் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என சிறப்பு புலனாய்வுக் குழு அறிவித்துள்ளது. அத்துடன், தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கை தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
'வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்' திட்டத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில் ஆதரவில்லாத, கைவிடப்பட்ட, காயமடைந்த வளா்ப்புப் பிராணிகளைப் பராமரிப்பதற்கு 'வள்ளலாா் பல்லுயிா் காப்பகங்கள்' என்ற புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.20 கோடி ஒதுக்கப்படுவதாகவும் கால்நடை பராமரிப்புத் துறைக்கு ரூ.1,314 கோடி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

