சென்னை: சட்டப்பேரவையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான வேளாண் துறையின் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார்.
நேற்று முன்தினம் மாநில அரசின் பொது வரவுசெலவுத் திட்ட அறிக்கையை நிதியமைச்சா் பழனி வேல் தியாகராஜன் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, ேநற்று வேளாண் துறைக்கான அறிக்கையைத் தாக்கல் செய்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உரையாற்றினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:
வேளாண் துறையின் பல்வேறு திட்டங்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.33,007 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறியவர், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவது குறித்தும் அறிவித்தார்.
பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.2,339 கோடி ஒதுக்கப்பட்டுள்ள தாகக் குறிப்பிட்டவர், கரும்பு சாகு படிக்கு ரூ.10 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது என்றார்.
"வேளாண் பட்டப்படிப்பை முடித்த 200 இளைஞர்களுக்கு வேளாண் தொழிலில் ஈடுபட தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும்.
"விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.5,157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
"ரூ.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மூலிகைத் தோட்டங்கள் 4,000 வீடுகளில் அமைக்கப்படும். இதற்குத் தேவையான மூலிகைச்செடிகள் அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்படும்.
"தக்காளியின் விலையை சீராக வைத்திருக்க, பருவமில்லாத காலங்களிலும் அதன் சாகுபடி ஊக்குவிக்கப்படும். 10 புதிய உழவர் சந்தைகள் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும்," என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
வரவேற்பும் எதிர்ப்பும்
இதற்கிடையே, அரசின் நிதிநிலை அறிக்கையை வரவேற்றும் எதிர்த்தும் கலவையான விமர்சனங்களை அரசியல் கட்சித் தலைவா்கள் பலரும் கூறிவருகின்றனர்.
வருவாய் அதிகரித்தபோதும் அதிக கடன் வாங்கி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
"நிதிநிலை அறிக்கை எதுவும் இல்லாத வெற்று அறிக்கை," என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
"தொலைநோக்குத் திட்டம் இல்லாத பகல் கனவு அறிக்கை. மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசின் திட்டங்களாக பெயர் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது," என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
"நலிவுற்ற தொழில் முனைவோரை மீட்டெடுக்கும் திட்டம் அறிக்கையில் இல்லை. ஏமாற்றம் அளிக்கிறது," என இந்திய தொழில் முனைவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வளா்ச்சிப் பாதையில் தமிழகம் செல்லும் முயற்சியாக அறிக்கை உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

