அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள்கள் திருத்தம் பணியில் சிக்கல்
இணையம் வாயிலாக தேர்வு எழுதிய சுமார் 10,000 மாணவர்கள் காலக் கெடுவுக்குள் விடைத்தாள்களை பதிவேற்றவில்லை எனக் கூறப்படுகிறது.
சென்னை: கிருமித்தொற்று அச்சம் காரணமாக வழக்கமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டிய பொறியியல் பட்டப் படிப்பு தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
பின்னர் பிப்ரவரி மாதம் இணையம் வழியாக தேர்வு நடத்தப்பட்டது. இதன்படி கல்லூரிகளுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டு காலை 9 மணிக்கு வினாத்தாள் வெளியிட்டது.
அதை பார்த்து மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதினர். பின்னர் விடைத்தாள்களை 'ஸ்கேன்' செய்து தேர்வு நேரம் முடிந்த 30 நிமிடங்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதே விடைத்தாள்களை அதே நாள் மாலை ஐந்து மணிக்குள் வேக அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். ஆனால் சுமார் 10,000 மாணவர்கள் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவர்கள் விடுமுறை எடுத்துள்ளதாக பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக அந்த 10,000 மாணவர்களும் தேர்வில் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது பற்றி விளக்கம் அளித்துள்ள அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள், "பிப்ரவரி 1 முதல் 12ஆம் தேதி வரை இணையம் வழியாக தேர்வில் பங்கேற்று விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாதவர்கள் விடுமுறை என எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது பற்றி ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது," என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே, தாமதமாக பதிவேற்றம் செய்த மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி நேற்று அறிவித்தார்.

