சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் எப்படி நடக்க வேண்டும், யார், யார் பேச வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
சென்ற சனிக்கிழமை கட்சித் தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க எம்எல்ஏக்கள் கூட்டம் நடை பெற்றது.
இந்தக் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள், தொகுதி பிரச்சினைகள் குறித்து எம்எல்ஏக்கள் எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. சட்டசபையில் பேச அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் வாய்ப்பு கேட்டுள்ளனர்.
ஒரு நாளைக்கு இருவர் வீதம், இரண்டு நாள்களில் நான்கு பேர் மட்டும்தான் பேச முடியும். 3வது நாளில் தலைவர்கள் பேசுவார்கள். எனவே அனைவருக்கும் வாய்ப்புஅளிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. யார் யார் பேசலாம் என்பதும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆளும் கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் தலைவர்கள் பேசும்போது எம்எல்ஏக்கள் அனைவரும் சபையில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. கேள்வி நேரம் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளதால் தொகுதிப் பிரச்சினைகளை அதிகம் பேச வேண்டும், மக்கள் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் எம்எல்ஏக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

