சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணி களுக்குப் பரிசுகள் வழங்கப்பட விருக்கின்றன.
ரூ. 2,000 மதிப்புள்ள பற்றுச் சீட்டு வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன் தொடர்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஆதரவு அளித்து வரும் பயணிகளை ஊக்கு விக்கும் வகையில் சில பரிசுத் திட்டங்கள் திங்கள் (இன்று) முதல் அமலுக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்யும் முதல் 10 பயணி களுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.
இது தவிர மேலும் 30 நாள் களுக்கு விருப்பம் போல் பயணம் செய்வதற்கான பயண அட்டை வழங்கப்படும்.
மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1,500 மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளை தேர்ந்தெடுத்து, மாதாந்திர அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தி 10 பயணிகளுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருள்கள் வழங்கப்படும் என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இவை தவிர இதர பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் 16 மெட்ரோ ரயில் நிலையங்களில் 'ரேபிடோ பைக்', 'உபர் ஆட்டோ' மற்றும் கார், 'ஸ்மார்ட்' பைக் வசதிகளும் 12 மெட்ரோ ரயில் நிலையங்களில் இணைப்பு பேருந்துகள், ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் மின்சார ரயில் நுழைவுச்சீட்டை எழும்பூர், சென்ட்ரல் மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களிலேயே பெறும் வசதி செய்யப் படுகிறது.
சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை சுமார் 10.50 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

