சென்னை: நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் முன்பு ஓ. பன்னீர் செல்வம் இன்று முன்னிலையாக விருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது.
ஜெயலலிதாவோடு தொடர்பு உடையவர்கள், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பலரிடம் பல்வேறு கட்ட விசாரணை நடந்துள்ளதாக மாலை மலர் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறுமுகசாமியின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதன் பின்னர் மீண்டும் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
2016 டிசம்பர் 4ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான் என்றும் அதற்கு உரிய சிகிச்சை அனைத்தும் அளிக்கப்பட்டதாகவும் விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் வாக்குமூலம் அளித்து இருந்தார்.
அதன் பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மார்ச் 21ஆம் தேதி நேரில் முன்னிலையாகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டது. சசிகலாவின் உறவினர் இளவரசியும் அன்றைய தினம் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக இன்று விசாரணைக்கு முன்னிலையாகிறார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து குற்றச்சாட்டுக்களையும் சந்தேகங்களையும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதன் தொடர்பில் விசாரணையின்போது அவரிடம் விளக்கம் கேட்கப்படும் எனத் தெரிகிறது.

