செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8d3642f6-762d-42bc-91dd-3e78f54f79b6
-

பாண்டவர் அணி வெற்றி

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019ல் நடந்த தேர்தல், வழக்கு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளையின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. இதற்கிடையே 'தேர்தல் செல்லாது' என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்தனர்.

அதை விசாரித்த உயர் நீதிமன்றம் தேர்தல் செல்லும் என்று கூறி வாக்குகளை எண்ண உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை 8 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணப்பட்டன. நடிகர் சங்க தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையில் சங்கரதாஸ் அணியும் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் போட்டியிட்டன. நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டி யிட்டனர். இந்நிலையில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக எதிரணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம்

மாணவர்கள் கேள்வி

கோவை: அரசு பள்ளி மாணவர்களுடன் பேருந்தில் பயணம் செய்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'போலாம் ரைட்' நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது. ஆட்சியர் சமீரன் தலைமையில் எஸ்.எஸ்.குளம், கோவில்பாளையம், கண்ணம்பாளையம், சொக்கம்பாளையம், எஸ்.சுங்கம் பாளையம் உள்ளிட்ட ஐந்து அரசு பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் 90 மாணவர்கள் இதில் பங்கேற்றனர். அப்போது, மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடினார்.

'நீங்கள் சாலையில் செல்லும்போது விபத்து நடந்தால் அந்த இடத்தில் மருத்துவராக இருப்பீர்களா?, மாவட்ட ஆட்சியராக செயல்படுவீர்களா?' என மாணவர் ஒருவர் அவரிடம் கேட்டார். "சிறிய விபத்தாக இருந்து கூட்டம் அதிகமாக இருந்தால் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ஆட்சியராகச் செயல்பட்டு, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்புவேன். பெரிய விபத்தாக இருந்தால், என்னால் முடிந்தவரை காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்து காப்பாற்றி, மருத்துவராகச் செயல்படுவேன்," என்று ஆட்சியர் சமீரன் பதில் அளித்தார். இதுபோல், மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவர் சுவாரசியமாக பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி இனி வாரந்தோறும் நடைபெறும் என ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.