சென்னை: சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கக்கூடாது என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துகளைக் குறைக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அரசு முன்வருமா? என சட்டமன்ற உறுப்பினர் அருள் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர், சாலை விபத்துகளைக் குறைப்பதே அரசின் முதன்மையான இலக்கு எனக் கூறினார்.
அத்துடன், சாலை விபத்துகளைக் குறைக்க உயர்மட்ட குழுவைக் கூட்டி, ஆேலாசனை நடத்தி இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்கள் தொடங்கப்பட்டதாகக் கூறிய அவர், இதன்மூலம் விபத்தில் சிக்கும் அனைவருக்கும் 48 மணி நேர இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் மூலம் இதுவரை 33,247 பேர் இலவச சிகிச்சை பெற்றுள்ளதாகக் கூறிய முதல்வர், இதன்மூலம் 33,000 பேரின் இன்னுயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

