வண்டலூர்: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் நடைபெற்ற தனியார் துறைக்கான வேலைவாய்ப்பு முகாமில், ஒரேநாளில் 8,752 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்களில் சிலருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
"தமிழகத்தில் வேலை இல்லை, வேலை கிடைக்கவில்லை, வேலைவாய்ப்பை பெறமுடியாத நிலையில் இருக்கிறேன் என்று பலரும் வருந்தும் நிலை, அடுத்த ஐந்து ஆண்டுகாலத்திற்குள் நீங்கிவிடும் என்ற உறுதியை அளிக்கிறேன்.
"அனைவருக்கும் உயர் கல்வி, அனைவருக்கும் வேலை என்பதே நமது அரசின் இலக்காக உள்ளது.
"அதேபோல், அனைவருக்கும் ஏதாவது ஒரு வேலை என்பதல்ல. அவரவர் படிப்புக்கேற்ற, தகுதிக்கேற்ற வேலை வழங்கப்பட்டாக வேண்டும் என்பதே இந்த அரசின் லட்சியம்," எனக் கூறியவர், அதனால்தான் பள்ளிக் கல்வியையும் கல்லூரிக் கல்வியையும் மேம்படுத்தி வருகிறோம் என்றார்.
"இந்த அரசு 2021ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது முதல் இதுவரை நடந்துள்ள வேலைவாய்ப்பு முகாம்களில் 5,708 நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன. 250,708 பேர் வேலைவாய்ப்புகளை நாடி வந்துள்ளனர். அவர்களில் 41,213 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இவர்களில் முக்கியமாக 517 பேர் மாற்றுத்திறனாளிகள்," என்றும் முதல்வர் மேலும் கூறினார்.
புதிய மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் துவக்கப்பட்ட பின்னர், முதல்முறையாக நேற்று முன்தினம் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இம்முகாமில் பங்கேற்ற 507 தனியார் துறை நிறுவனங்கள் 73,950 வேலைகளுக்கு ஆள்கள் தேவைப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், 8,752 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
இதற்கிடையே, தோ்தல் சமயத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான அறிவிப்பை சட்டப்பேரவைக் கூட்டத்தில் திமுக அரசு வெளியிடவேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளாா்.
பஞ்சாப் மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பகவந்த்சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, இளைஞா்கள் பயனடையும் வகையில் அவர்களுக்கு 25,000 அரசு வேலை வாய்ப்புகளை வழங்க முடிவு செய்திருப்பதையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

