திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே கருக்கலைப்பின்போது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கருக்கலைப்பு செய்துவிட்ட மருந்தக உரிமையாளர் முத்துக்குமாரி, தாதி கவிதா ஆகிய இரு பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த வர் சின்னத்தம்பி. இவரது மனைவி செல்வி, 30. இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், செல்வி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். ஐந்து மாத கர்ப்பமாக இருந்த செல்வி தனது கரப்பத்தைக் கலைக்க முடிவு எடுத்து, தனியார் மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெற்றுள்ளார். அங்கு சிகிச்சைக்கான செலவுத்தொகை அதிகமாக கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, செல்வி அப்பகுதியில் மருந்துக் கடையை நடத்தி வரும் மணிகண்டன் மனைவி முத்துக்குமாரி, 40, என்பவரிடம் கருக்கலைப்பு செய்வதற்காகச் சென்றுள்ளார்.
முத்துக்குமாரி தனது வீட்டு மாடியில் வைத்து ஆ.பாண்டலம் பகுதியைச் சேர்ந்த தாதி கவிதா, 38, என்பவரின் உதவியோடு செல்விக்கு கருக்கலைப்பு செய்திருக்கிறார். இந்நிலையில், அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு செல்வி உயிரிழந்தார்.

