செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
7928b15b-cd7b-4ce7-8205-7c6c5e6b1be6
-

சேகர் பாபு: தாலிக்குத் தங்கம் திட்டம் கைவிடப்படவில்லை

சென்னை: தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வந்த நிலையில், இத்திட்டம் நிறுத்தப்படவில்லை என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

"தாலிக்குத் தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதாக வரவு செலவுத் திட்ட அறிக்கையில் எந்த ஓர் இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் புறக்கணிக்கமாட்டார். அம்மா உணவகத்தில் இப்போதும் செயல்பட்டு வருகிறது. அரசு தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கை காற்றுப் போன பலூன் போல இருப்பதாக அதிமுக கூறுவதை ஏற்கமுடியாது. ஏனெனில், அதிமுகவே தற்போது காற்றுப் போன பலுான் போலத்தான் உள்ளது," என அவர் கூறியுள்ளார்.

1.50 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: திருமண உதவித் திட்டத்தின் கீழ் சராசரியாக 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது பற்றி விளக்கம் அளித்த நிதியமைச்சர், இத்திட்டத்திற்காக ஒவ்வோர் ஆண்டும் ரூ.760 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

கடலில் நீந்தி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி சிறுமி

அரிச்சல்முனை: மும்பையைச் சேர்ந்த மதன் ராய் என்பவரின் 13 வயது மகள் ஜியா ராய். காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி. இலங்கையின் தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை 28.5 கிலோ மீட்டர் தூரத்தை 13 மணி நேரத்தில் ஜியா ராய் கடலில் நீந்திக் கடந்தார்.

இந்தியா-இலங்கைக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இந்தச் சாதனையை அவர் புரிந்துள்ளார். நீந்தியபடி தனுஷ்கோடியை அடுத்துள்ள அரிச்சல்முனையில் கரையேறிய சிறுமிக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர்: கடந்த 1955ஆம் ஆண்டு கும்பகோணம் அருகில் உள்ள நரசிங்கம்பேட்டை கைவினைக் கலைஞர் ரங்கநாத ஆச்சாரி என்பவர், எளிமையாக வாசிக்கும் வகையில் ஒரு நாதஸ்வரத்தை உருவாக்கினார். அதுதான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம். தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டையில் தற்போது 20 குடும்பங்களைச் சேர்ந்த இசைக்கலைஞர்களால் தயாரிக்கப்பட்டு இசைக்கப்படும் பாரம்பரிய இசைக்கருவியான இந்த நாதஸ்வரத்திற்கு எட்டு ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு தற்போது புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.