சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா எந்தவித சதித்திட்டமும் தீட்டவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்று அவர் இரண்டாவது நாளாக நேரில் முன்னிலையானார்.
அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா குடும்பத்தினரும் சதித்திட்டம் ஏதும் தீட்டவில்லை என்றார்.
"ஜெயலலிதா குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு கூறியபோது, என்னை அழைத்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்ட சொன்னார் ஜெயலலிதா. தமது பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் நத்தம் விஸ்வநாதனை அழைத்து, ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வர் என ஜெயலலிதா கூறினார்.
"மிகுந்த துயரத்துடன் அழுது கொண்டிருந்தபோது, என்னிடம் அழக்கூடாது என்றும் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்," என்று தனது வாக்குமூலத்தில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதாவுக்கு என்ன மாதிரியான உணவுகள் வழங்கப்பட்டன என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"மருத்துவமனையில் ஜெயலலிதா நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் கூறியதைதான் நான் அமைச்சர்களிடம் தெரிவித்தேன்," என்றார் ஓபிஎஸ்.

