மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி: முதல்வர் உறுதி
சென்னை: நீதிமன்றத் தீர்ப்பிற்கு பிறகு மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அந்தப் பணியாளர்களை நியமனம் செய்தது திமுக ஆட்சி எனில் வீட்டுக்கு அனுப்பியது அதிமுக ஆட்சி என சட்டப்பேரவையில் பேசியபோது அவர் குற்றம்சாட்டினார். "நீதிமன்றத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கு தொடுத்துள்ளதாகக் கூறிய அவர், வழக்கின் தீர்ப்பிற்குப்பின் மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தமிழக முதல்வருடன் சந்திப்பு
சென்னை: நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்டி முடிக்க மேலும் 21 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், முதல்வர் தங்களுக்கு உதவி செய்வார் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர். "நடிகர் சங்கத்துக்கான சொந்த கட்டடத்தைக் கட்டுவதில் உறுதியாக உள்ளோம். 60 விழுக்காடு பணிகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகளை முடிக்க மேலும் ரூ.21 கோடி தேவைப்படும்," என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
சசிகலா: ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு உண்மை தெரிய வந்துள்ளது
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் கடவுளுக்குத் தெரிந்த உண்மை ஓ.பன்னீர்செல்வம் மூலம் தமிழக மக்களுக்கு தெரியவந்துள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். எது உண்மையோ அதை மாற்றவோ, திரையிட்டு மறைக்கவோ முடியாது என்றும் ஜெயலிலதா மரணம் குறித்து மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். "விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டபோது நானும் அதை வரவேற்றேன். அந்த ஆணையம் மூலமே உண்மை பொதுமக்களுக்கு தெரியவரும்," என்று சசிகலா கூறியுள்ளார்.
கோவில் மண்டபத்தை இடிக்க உத்தரவு: காரைக்காலில் முழு அடைப்பு
காரைக்கால்: காரைக்கால் பகுதியில் உள்ள பொய்யாதமூர்த்தி விநாயகர் கோவில் கோபுர வாயிலில் கட்டப்பட்டுள்ள முகப்பு மண்டபத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது அதிர்ச்சி அளிப்பதாக இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அந்த அமைப்புகள் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் காரைக்காலில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொது இடத்தை ஆக்கிரமித்து இந்த மண்டபம் கட்டப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் மார்ச் 28ஆம் தேதிக்குள் அதை இடிக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல் அவசர கதியில் தீர்ப்பளித்துள்ளதாக இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மதிமுக தலைமை கழகச்
செயலாளராக வைகோ மகன் தேர்வு
சென்னை: உட்கட்சிப் பூசல் பெரிதாகி வரும் நிலையில், மதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் வைகோவின் மகன் துரை வையாபுரி, கட்சியின் தலைமைக் கழகச் செயலாளராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், தாம் அரசியலில் ஈடுபட்டிருப்பதைக் குறிப்பிடும்போது, தாம் புலி வாலைப் பிடித்துள்ளதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
வரும் 25ஆம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழக அரசு மக்களைத் திசைதிருப்பும், ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கையை அளித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். தமிழக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் எதிர்வரும் 25ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.

