ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்
விருதுநகர்: ராஜ பாளையம் அருகே வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் என்பவரது மனைவி வீரலட்சுமிக்கு விருதுநகரில் உள்ள ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. இரு பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை என மூன்று குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். படம்: ஊடகம்
50 லட்சம் பேரை அடையாளம் கண்டு தடுப்பூசி போடத் திட்டம்
சென்னை: தமிழகத்தில் இதுவரை கொவிட்-19 முதல் தவணை தடுப்பூசியைக் கூட போட்டுக்கொள்ளாமல் 50 லட்சத்து 99 ஆயிரத்து 904 பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதேபோல், குறிப்பிட்ட கால அவகாசம் முடிந்தும் 1 கோடியே 32 லட்சத்து 52 ஆயிரத்து 97 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர்.
அவர்களை அடையாளம் கண்டு தடுப்பூசி போட்டுவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'கேரளா இடையூறு செய்தால் உச்ச நீதிமன்றத்தை தமிழகம் நாடலாம்'
புதுடெல்லி: முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பில் கேரளா இடையூறு கொடுத்துவந்தால் உச்ச நீதிமன்றத்தை தமிழகம் நாடலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக ஏதாவது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றால்கூட அதையும் செய்ய தாங்கள் தயாராக இருப்பதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஆறு டன் பாறையைக் குடைந்து எஸ்பிபியின் முகம் வடிவமைப்பு
ஆறு டன் எடைகொண்ட பாறையில் செதுக்கப்பட்டுள்ள எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உருவம். படம்: ஊடகம்
காஞ்சிபுரம்: ஆறு டன் எடை கொண்ட பாறையைக் குடைந்து பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் முகம், புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில்லில் உருவாக்கப்பட்டு காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமரைப்பாக்கம் நினைவு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. உலகெங்கும் வாழும் இசை ரசிகர்களைத் தனது குரலால் வசியப்படுத்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், 74, கடந்த 2020ல் காலமானார்.
அவரது உருவத்தின் அருகில் அவரது கையெழுத்து, அவர் அடிக்கடி உச்சரிக்கும் 'சர்வே ஜனாஸ்ஸு; ஜனா பவந்து; ஸர்வேசு ஜனா சுகினோ பவன்' என்ற மந்திரத்தையும் செதுக்கியுள்ளோம். "அனைவரும் மகிழ்ச்சியாக நோயின்றி, ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; அனைவருக்கும் சுபம் விளையவேண்டும்; ஒருவர் கூட துயரப்படக்கூடாது," என்பதே எஸ்பிபி அடிக்கடி உச்சரிக்கும் சமஸ்கிருத சொல்லின் அர்த்தமாகும் என்று சிலையை வடிவமைத்த சிற்பிகள் கூறினர்.

