துபாய்: துபாய் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார்.
துபாயில் நடக்கும் உலக கண்காட்சியில் தமிழக அரங்கை திறந்து வைப்பதற்காக அவர் தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் துபாய் சென்றார்.
நேற்று ஐக்கிய அரபு சிற்றரசு களின் பொருளியல் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்களை அவர் சந்தித்தார்.
அமைச்சர்கள் தானி பின் அகமது அல் ஸீயோதி, அப்துல்லா பின் டூக் அல் மர்ரி ஆகியோரிடம் முதல்வர் கலந்துரையாடினார்.
அப்போது தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலர் கிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
அப்போது தமிழகத்தில் தொழில் துவங்க நிலவும் சாதகமான சூழல் குறித்து விளக்கிய முதல்வர், ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அமைச்சர்கள் தமிழகம் வர வேண்டும் எனவும், முதலீட்டாளர் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
நேற்று காலை 10 மணிக்கு துபாய் சென்ட்ரல் பார்க் டவரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னணி தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை நடத்துவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
பரபி பெட்ரோ கெமிக்கல்ஸ் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி முகமது அஸ்டர்-டிஎம்.ஹெல்த்கேர், முதன்மை செயல் அதிகாரி ஆசாத் முபீன், இமார் பிராப்பர்டீஸ் தலைமை செயல் அதிகாரி ஹதிபத்ரி, ஷரப் குழுமத்தின் துணைத் தலைவர் ஷராபுதீன் ஷரப் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
அப்போது இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் முதலீடு செய்வதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது.
நேற்று பிற்பகல் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாயில் நடந்து வரும் அனைத்துலகக் கண்காட்சிக்கு சென்றார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை அவர் திறந்து வைத்தார்.
அந்த அரங்கின் முகப்பில் 'மேட் இன் தமிழ்நாடு' என்று அச்சிடப்பட்டு இருந்தது. பின்னர் கண்காட்சியில் தமிழ்நாடு வாரக் கொண்டாட்டத்தையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருள்கள், ஜவுளி, தமிழ்வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழில் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழகத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணக் காட்சிப் படங்கள் இந்த அரங்கில் திரை யிடப்பட்டன.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள், காற்றாலைகள் உள்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் உருவங்களும் இந்த அரங்கில் காட்சிப் படுத்தப்பட்டன.
துபாய் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அபு தாபிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புலம் பெயர்ந்த தமிழர்களை அவர் சந்திக்கிறார்.

