சென்னை: தமிழகத்தில் ஆங்காங்கே குடிநீர்ப் பந்தல்களை அமைத்து மக்களின் தாகத்தைத் தணிக்க குடிநீர், மோர் வழங்குக என்று அதிமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
குடீநீர்ப் பந்தல்கள் சுகாதாரமான முறையில் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று் தலைமை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக கட்சி யின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், "எம்ஜிஆரின் அயராத உழைப் பாலும் அவர் அள்ளி, அள்ளித் தந்த கொடைத் தன்மையினாலும் கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களின் தியாகத்தாலும் தமிழக மக்களின் வேண்டுதலாலும் உருவான இயக்கம்தான் அதிமுக," என்று குறிப்பிட்டு உள்ளனர்.
"அவரது மறைவுக்குப் பின்னர் கட்சியை அல்லும் பகலும் அயராது பாடுபட்டு தன்னையே அர்ப் பணித்து ஜெயலலிதா இந்த இயக்கத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க பல வெற்றிகளைப் பெற்ற இயக்கமாக உருவாக்கிக் காட்டினார்.
"நம் இருபெரும் தலைவர்களின் பூரண நல்லாசியோடு அதிமுக தன்னலம் கருதாமல் பொதுநலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கட்சிப் பணிகளை ஆற்று வதிலும் மக்கள் பணிகளை மேற்கொள்வதிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதை பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
"அதிமுக சார்பில் ஒவ்வொர் ஆண்டும் கோடை காலத்தில் கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் கட்சித் தொண்டர்களும் தாங்கள் வாழும் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர்ப் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம்.
"அதேபோல் இந்த ஆண்டும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் இப்பொழுதே தாங்கள் வாழும் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்," என்று ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கையின் வாயி லாகத் தெரிவித்து உள்ளனர்.

