சென்னை: இம்மாதம் 28, 29 தேதிகளில் பணிக்கு வராத தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் அவர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், வரும் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் பணிக்கு வந்தோர், வராதோர் பட்டியலை துறைவாரியாக அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என அறிவித்துள்ளது.
மார்ச் 28, 29 தேதிகளில் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைக் கை விடுவது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசு ஊழியர்கள் இம்மாதம் 28, 29ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன.
பெரும்பாலான தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் பொதுப்போக்குவரத்தைப் பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் பெரும்பாலும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதால் பேருந்துகள் முழுமையாக இயக்க முடியாத நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. ஆனாலும் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையில் வேலை நிறுத்தம் நடக்கக்கூடிய 28, 29 ஆகிய நாள்களில் தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

