செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
794620ae-8319-408f-a161-4a818c253657
-

'நீட் விலக்கு கோரும்

மசோதா கிைடக்கவில்லை'

சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதால் பிப்ரவரியில் நடந்த சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் எம்.பி. ராசா எழுப்பிய எழுத்துபூர்வ கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், நீட் விலக்குக் கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா, இதுவரை உள்துறை அமைச்சுக்கு வந்து சேரவில்லை என்று கூறியுள்ளார்.

ஏப்ரல் 25ல் குன்றத்தூர்

முருகன் கோயில் குடமுழுக்கு

காஞ்சிபுரம்: ஏப்ரல் 25ஆம் தேதி குன்றத்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்து உள்ளார். பிரசித்தி பெற்ற குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடமுழுக்குப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபத்திற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயில்

விவகாரம்; தடை உத்தரவு மீட்பு

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் யாரும் ஏறக்கூடாது என கோவில் தீட்சிதர்கள் முடிவு செய்து அறிவித்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இதையடுத்து பக்தர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், தீட்சிதர்களுக்கு எதிராகவும் சிற்றம்பல மேடையில் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

ஆனால் இது குறித்த ஆலோசனைகள் நடந்து வருவதால் யாரும் எவ்வித போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, 144 தடை உத்தரவைப் பிறப்பித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று கோட்டாட்சியர் ரவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் 144 தடை உத்தரவு மீட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவித்து உள்ளார்.