வேலூர்: மின்சார இருசக்கர வாகனத்தை 'சார்ஜரில்' போட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருந்த தந்தையும் மகளும் ேநற்று அதிகாலையில் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் வேலூர் மாவட்டம், சின்ன அல்லாபுரம் பகுதியில் நடந்துள்ளது.
சிறுகச் சிறுக காசு ேசர்த்து 'கேபிள் டிவி' பணியாளரான துரைவர்மா, 49, மூன்று தினங்களுக்கு முன்புதான் புதிதாக பேட்டரியில் ஓடும் மின்சார இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.
அவரது மனைவி காலமாகி விட்ட நிலையில், தனது வீட்டின் வெளியே வாகனத்தை சார்ஜரில் போட்டுவிட்டு, மகள் மோகனபிரீத்தியுடன், 13, தூங்கியுள்ளார்.
நேற்று அதிகாலை மூன்று மணியளவில் மின் இணைப்பில் இருந்த வாகனம், உயர் மின் அழுத்தம் காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும் இதனால் அருகில் இருந்த மற்றொரு வாகன மும் தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப் படுகிறது.
இதனையடுத்து, வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றம் அடைந்த துரை வர்மா, தனது மகள் மோகன பிரீத்தியுடன் வீட்டை விட்டு வெளியேற இயலாததால் கழிவறைக்குள் சென்று தஞ்சமடைந்தார்.
இருப்பினும், கரும்புகை நச்சுப் புகையாக மாறி தந்தையும் மகளும் மூச்சுவிட சிரமப்பட்டு கழிவறைக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். விசாரணை நடக்கிறது.

