கோவை: தமிழகத்தில் பல்வேறு குழப்பங்களால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நகராட்சி, பேரூராட்சிகளுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது. கோவை வெள்ளலூர் பேரூராட்சி, மதுரை திருமங்கலம் நகராட்சியில் தேர்தலின் போது இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்துவிட்டனர்.
கோவையில் அதிமுக- திமுகவினருக்கு இடையே ஏற்பட்ட கடும் மோதலில் திமுக கவுன்சிலர் செந்தில் குமாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மற்றொரு இடத்தில் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் அதிகம் உள்ள நிலையில், தலைவர் பதவியைக் கைப்பற்றும் முயற்சியில் திமுக ஈடுபட்டதால் மோதல் ஏற்பட்டு, அடிதடி கலவரம் வெடித்தது.

