செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c0296e10-e5b2-41e8-83ec-eb97c039249c
-

ஜூனில் கொவிட்-19 நான்காம் அலை

ஆலந்தூர்: தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் நேற்று 26வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில், சென்னை ஆலந்தூர் தொகுதியில் தடுப்பூசி முகாம்களை நல்வாழ்வுத் துைற அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். "உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. வரும் ஜூன் மாதத்தில் கொரோனா நான்காவது அலை பரவும் வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே," என்றார்.

பயில்வான் ரங்கநாதன் மீது புகார்

சென்னை: பெண்கள் சமூகத்தைப் பற்றி இழிவான கருத்துகளைச் சமூக வலைத்தளங்களில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பதிவிட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

"கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டுமொத்த பெண்களின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் அருவருக்கத்தக்க வகையில் பயில்வான் ரங்கநாதன் கருத்து கூறி வருகிறார். இதனால் பல பெண்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். அவர்களுள் நானும் ஒருத்தி. பெண் இனத்தை இழிவுபடுத்தும் ரங்கநாதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று திவ்யா என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கைதிகளின் வீடுகளில் சோதனை

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ராமசாமி, பிரவீன் உள்ளிட்ட எட்டுப் பேரின் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியதுடன், அவர்களது வீட்டில் இருந்த மின்சாதனப் பொருள்களையும் ஆய்வு செய்தனர்.

விசாரணைக் கைதி தப்பியோட்டம்

தஞ்சாவூர்: திருச்சி பாலக்கரையைச் சேர்தவர் தர்மராஜ். இவர் மீது பல கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தஞ்சாவூரில் உள்ள நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்தி விட்டு திரும்ப அழைத்துச் சென்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளை தர்மராஜ் தள்ளிவிட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். கைதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.