காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து அரசு ஊழியராகப் பணியாற்றி வந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் அவரது குடும்பத்துக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரின் மகள் சரண்யா, 24. மாற்றுத்திறனாளியான இவர், காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூரில் உள்ள அரசு வேளாண் மையத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி சரண்யா களக்காட்டூரில் உள்ள அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அந்த மையத்தில் கழிவறை வசதி இல்லாததால், அருகில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றார். அப்போது அங்கு இன்னும் பாதி கட்டிமுடிக்கப்படாத நிலையில் இருந்த கழிவுநீர்த் தொட்டியின்மீது கால் வைத்தபோது, அதன் ஓடு உடைந்து சரண்யா கழிவுநீர்த் தொட்டியில் தவறி விழுந்து இறந்தார்.
இந்த மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சரண்யாவின் குடும்பத்திற்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

