சென்னை: துபாய்க்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.2,600 கோடி முதலீட்டில் 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகத் தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர் சந்திப்பில் முதல்வர் கலந்துகொண்டார். அவர் முன்னிலையில் துபாயைச் சேர்ந்த நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் உற்பத்தித் திட்டத்தை தமிழகத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இத்துடன், ஆஸ்டர் டி.எம்.ஹெல்த் கேர் அமைப்பு ரூ.500 கோடி முதலீட்டில் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தம், ஷெராப் குழும நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு மற்றும் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைப்பதற்கான உடன்படிக்கை என, மொத்தம் ரூ.2,600 கோடி முதலீடு செய்ய துபாய் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.
முதலீட்டாளர் சந்திப்பைத் தொடர்ந்து, இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மூவாயிரம் பேர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர், அயலகத் தமிழர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான கட்டமைப்புகள் அனைத்தும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
துபாயை வெளிநாடாக நினைக்க முடியாத வகையில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடாக உள்ளதாக முதல்வர் கூறினார். மேலும் உலகளவில் புகழ்பெற்ற பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடுகளைச் செய்துவருகின்றன என்றும் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
"தமிழகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சொத்துச் சந்தை வர்த்தகத்துக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன. சுற்றுலாத் துறையிலும் விருந்தோம்பல் துறையிலும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
"தொழில்புரிவதற்கும் முதலீடுகள் மேற்கொள்ளவும் எங்கள் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வணிகச் சூழல் அமைப்பினைத் தொடர்ந்து மேம்படுத்த முயற்சி செய்கிறோம். எல்லா தர வரிசைகளிலும் தமிழகம் முன்னேறி வருகிறது. எங்கள் வளர்ச்சியில் பங்கேற்று, நீங்களும் பயன்பெற வேண்டும்," என்று மு.க. ஸ்டாலின் வேண்டிக்கொண்டார்.
தமது பயணத்தின் அடுத்த கட்டமாக அவர் அபுதாபி செல்லத் திட்டமிட்டுள்ளார். வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் காக்க 'புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியம்' அமைத்து அதற்குத் தேவையான நிதி வழங்கி உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய சமூக மற்றும் கலாசார மையமும் அபுதாபிவாழ் தமிழ்ச் சமூகமும் இணைந்து நன்றி தெரிவிக்கும் வகையில் அபுதாபியில் மிகப் பெரிய பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன. பின்னர் துபாயில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வந்து சேருகிறார்.
துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இருதரப்பு வர்த்தக இணக்கம்

