செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a71c7caf-b0c4-49dd-a58a-06b2ffa254b5
-

புது பைக் வாங்க 2.6 லட்சம் ஒரு ரூபாய் நாணயம் செலுத்திய இளையர்

சேலம்: சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த பூபதி எனும் இளையர், சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை ஒரு ரூபாய் நாணயங்களாக மாற்றி மூட்டையில் கட்டிச்சென்று, புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை நேற்று முன்தினம் வாங்கினார். வாங்குமிடத்தில் ரூபாய் நாணயங்களை மூட்டையில் இருந்து அவர் கொட்டியதால் அங்கு அது மலைபோல் குவிந்து கிடந்தது (படம்: தினத்தந்தி). இதைப் பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த மூன்று மாதங்களாக ஒரு ரூபாய் நாணயங்களைச் சுற்றுவட்டார வங்கிகள், தேநீர்க் கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் இருந்தும், நண்பர்களிடமிருந்தும் சேகரித்ததாகக் கூறினார் பூபதி.

ரூ.1.14 கோடி மதிப்புள்ள தங்கக் கடத்தல் முறியடிப்பு

சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் கடத்திவரப்பட்ட ரூ.1.14 கோடி மதிப்புமிக்க தங்கத்தைக் கைப்பற்றியுள்ளனர். இதன் தொடர்பில் பயணிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். துபாயிலிருந்து வெள்ளிக்கிழமை சென்னை சென்ற விமானத்தில் கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவர் 1.48 கிலோகிராம் தங்கத்தை மறைத்து எடுத்துச் சென்றதாகக் கூறப்பட்டது. அதன் மதிப்பு ரூ.72.20 லட்சம். இதைத் தொடர்ந்து ஷார்ஜாவில் இருந்து சனிக்கிழமை சென்னை சென்ற விமானத்திலும் பயணி ஒருவர் 880 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.42.51 லட்சம். பயணிகள் இருவரும் உள்ளாடைகளில் மறைத்து தங்கத்தைக் கடத்த முயன்றது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

மதுரை புகைப்படக் கலைஞருக்கு அனைத்துலக விருது

மதுரை: மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் செந்தில்குமரனுக்கு அனைத்துலக விருது கிடைத்துள்ளது.

'வேர்ல்ட் பிரஸ் போட்டோ' அறக்கட்டளை சார்பில் அனைத்துலக அளவில் புகைப்படக் கலைஞரைக் கௌரவிக்கும் இந்த விருதுக்கு 130 நாடுகளில் இருந்து 4,066 பேர் நியமனம்பெற்றனர். இவர்களில் இருந்து மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் செந்தில்குமரன் விருதுக்குரியவராகத் தேர்வு செய்யப்பட்டார். புலிகளுக்கும், மனிதர்களுக்குமான வாழ்வியல் குறித்த படத்துக்கு இவ்விருது கிடைத்துள்ளது. அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

தொட்டபெட்டா சிகரம் மீண்டும் திறப்பு

நீலகிரி: புகழ்பெற்ற தொட்டபெட்டா மலைச் சிகரம் ஓராண்டிற்குப் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளது. மழையால் சாலைகள் பழுதடைந்ததை முன்னிட்டு, தொட்டபெட்டா சிகரம் மூடப்பட்டிருந்தது. சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அது திறக்கப்பட்டது.