நாகர்கோவில்: கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழைத்தளத்துடன் பாலம் அமைத்து, ஓராண்டுக்குள் அது பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு இந்தத் தகவலை வெளியிட்டார்.
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானவை. இவற்றை மக்கள் பார்க்க உதவும் வகையில் தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகுச் சேவையை இயக்கி வருகிறது. விவேகானந்தர் பாறைக்கு பெரும்பாலும் தடங்கலின்றி படகுகள் இயக்கப்பட்டாலும், கடல் நிலையில் ஏற்படும் மாறுபாடுகளால் திருவள்ளுவர் சிலைக்கு அவ்வப்போது படகுச் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
எனவே, திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே பொதுமக்கள் நடந்து சென்று பார்த்து மகிழும் வகையில் கண்ணாடித் தளத்துடன் இணைப்புப் பாலம் அமைக்கப்பட உள்ளது. இணைப்புப் பாலம் அமைய உள்ள பகுதியை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே 72 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் மீது சுற்றுலாப் பயணிகள் செல்லும்போது முக்கடலின் அழகைப் பார்த்து ரசிக்கவும், கடலின் சீற்றத்தால் பாதிப்பு ஏற்படாத வகையிலும் கடினத் தன்மை கொண்ட கண்ணாடி இழை அமைக்க ஏலக்குத்தகைக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
"ஓராண்டுக்குள் பாலத்துக்கான பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்றார் அவர். இரவு நேரத்திலும் கண்டுகளிக்க ஏதுவாக மின்னொளிக்கு ஏற்பாடு செய்யப்படும்.
ஆண்டுக்கு ஏறக்குறைய 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்துசெல்வது வழக்கம் என்று சுற்றுலாத் துறைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

