சென்னை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், தற்போது நாடுமுழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள், திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாதவையாக மாற்றப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் 13,960 கிராமங்களை திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத கிராமங்களாக மாற்றி, தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
11,477 கிராமங்களை திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாதவையாக மாற்றிய தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்த கிராமங்களில் சாண எரிவாயு உள்ளிட்ட கழிவு மேலாண்மை திட்டங்கள், சமையலறை மற்றும் சலவை நிலைய கழிவுநீர் மேலாண்மை, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, மனிதக் கழிவு மேலாண்மை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்துக்காக ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 881 கோடி ஒதுக்கப்பட்டு, கிராமங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுற்றுப்புற சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று இந்தியாவின் மத்திய குடிநீர், சுற்றுப்புற சுகாதாரத் துறை செயலர் வினி மகாஜன் குறிப்பிட்டார்.